”பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பூசி இன்னும் 6 மாதங்களில் கிடைக்கும்” என மத்திய அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், உயிரிழப்புகளும் நிகழ்கின்றது. குறிப்பாக புற்றுநோய் சிகிச்சைக்கு அதிக பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்தோரால் இந்த சிகிச்சையை மேற்கொள்ள முடியாத சூழல் உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பூசி இன்னும் 6 மாதங்களில் கிடைக்கும் என மத்திய அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரம், குடும்ப நலம் மற்றும் ஆயுஷ் துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ், “நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த பிரச்சனையை நிவர்த்தி செய்ய மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்காக பகல் நேர புற்றுநோய் மையங்கள் நிறுவப்படும்.
பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களுக்கான தடுப்பூசி குறித்த ஆராய்ச்சி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. தற்போது சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், இன்னும் 5 முதல் 6 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும். 9 முதல் 16 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்த தடுப்பூசி போட தகுதியுடையவர்கள். இந்த தடுப்பூசி மார்பகம், வாய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களை எதிர்கொள்ளக்கூடியது” எனத் தெரிவித்துள்ளது.