பழங்குடியின மக்களிடம் பாரம்பரிய வழிபாடுகள் இருப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் திருமணமாகாத ஆண்கள் தொப்பை வளர்ப்பைப் பாரம்பரிய வழிமுறையாகக் கொண்டுள்ளனர் என்று சொன்னால் நம்பமுடிகிறதா? அதிலும் அவர்களைத் தான் பெண்கள் திருமணம் செய்ய விரும்புகின்றார்களாம். அப்படி ஒரு விநோத வழிமுறையை எத்தியோப்பியாவில் போடி பழங்குடியினர் கொண்டுள்ளனர். அதிக தொப்பையைக் கொண்டுள்ளவர் தான் அந்த பழங்குடியினர் இனத்தின் வீரராகவும் சிறப்பிக்கப்படுகிறார்.
போடி பழங்குடியினர் தென்கிழக்கு எத்தியோப்பியாவில் உள்ள ஓமா பள்ளத்தாக்கு பகுதியில் வசித்து வருகின்றனர். ஓமா நதிக்கரையில் விவசாயம் செய்தும் கால்நடை மேய்ச்சல் நடத்தியும் வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் கேயல் எனப்படும் விழாவைச் சந்திர புத்தாண்டு காலத்தில் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த விழாவில் அந்த இனத்தைச் சேர்ந்த திருமணமாகாத ஆண்கள் இடையே போட்டி நடத்தப்படும். அது தான் தொப்பை வளர்க்கும் போட்டி. போட்டியில் கலந்துகொள்ளும் ஆண்களில் யார் அதிகமாகத் தொப்பை வளர்க்கிறாரோ அவரே இனத்தில் ஹீரோவாக சிறப்பிக்கப்படுவார்.
அதற்காக அந்த விழா தொடங்குவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே திருமணமாகாத ஆண்கள் அவர்களின் இனத்தை விட்டு வெளியேறி தனிமையில் தங்கி தயார் ஆவர். இந்த 6 மாதக் காலங்களுக்கு வெறும் பசுவின் ரத்தம் மற்றும் பாலை மட்டும் தான் குடிக்க வேண்டும். காலையில் இருந்து அதை மட்டும் குடித்து 6 மாதங்களுக்குத் தொப்பை ஏற்ற வேண்டும்.
இந்த வழிமுறையானது 4 போடி இனக்கிராமங்களில் நடக்கும். போட்டியில் பங்கேற்கவுள்ள ஆண்கள் அனைவரும் கூடி, அந்த இனத்திற்கான புனித மரத்தைச் சுற்றி வருவர். மரத்தைச் சுற்றி ஓடுவது தான் போட்டியே.
அதிக எடைக் காரணத்தினால் அவர்களால் நடக்க இயலாத நிலையில், பெண்கள் அவர்களுக்கு உதவியாக இருந்து நீர், உத்வேகம் தரும் பாணம் போன்றவற்றைக் கொடுத்து மரத்தைச் சுற்றி முடிக்க வைப்பர். இந்த போட்டியில் பங்கேற்ற ஆண்களில் அதிக எடைக் கொண்டவர்களைத் தேர்வு செய்து சிறப்பிக்கப்படுவார். மேலும் அவர்களைத் திருமணம் செய்யவே பெண்களும் விரும்புகின்றனர். இந்த விழாவின் போது ஆண்களைக் கவருவதற்காகப் பெண்கள் ஆடை அணிகலன்கள் அணிந்து அலங்கரித்துக் கொண்டு பங்கேற்பர்.