பெண் தொழிலதிபர்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்திய பெண் தொழிலதிபர்களில் டாப் 10 பட்டியலைத் தொகுப்பில் பார்க்கலாம்.
பெண்களுக்கு எதிராக சமுதாயத்தில் இழைக்கப்படும் அநீதிகளுக்கு மத்தியில், உலகளவில் பெண் தொழிலதிபர்கள் அதிகரித்து வருகின்றனர். அதாவது, அனைத்து துறைகளிலும் பெண்கள் கோலோச்ச துவங்கியிருக்கின்றனர். கார் ஓட்டுவது முதல் வானுார்தி இயக்குவது வரை, பெண்களின் வளர்ச்சி என்பது, வியக்கத்தக்கது. இல்லத்தரசிகளாய் குடும்பத்தை நிர்வகிக்கும் திறமை, தொழிலாளியாக, பணியாளராக, நிர்வாகியாக என, பணி செய்யும் தளத்தில் காண்பிக்கும் திறமை என அனைத்திலும், ஆண்களுக்கு நிகராக பெண்களும் பணியாற்ற துவங்கியிருக்கிறார்கள். அந்தவகையில், பெண் தொழிலதிபர்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்திய பெண் தொழிலதிபர்களில் டாப் 10 பட்டியலைத் தொகுப்பில் பார்க்கலாம்.
பல்குனி நாயர் நைகா என்ற அழகுசாதன பொருள்கள் விற்பனைக்கான இணையதளத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த பல்குனி நாயரின் சொத்து மதிப்பு சுமார் 39 ஆயிரம் கோடி ரூபாய் ஆக உள்ளது. பெங்களூரைச் சேர்ந்த கிரண் மஜும்தார் ஷா பயோகான் என்ற நிறுவனத்தைத் நிறுவியவர். பயோடெக்னாலஜி துறையில் முன்னோடிகளில் ஒருவர். பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் போன்ற விருதுகளை பெற்றிருக்கிறார். இவரது சொத்து மதிப்பு சுமார் 29 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். வந்தனா லூத்ரா மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர். விஎல்சிசி ஹெல்த் கேர் என்ற அழகுப் பொருட்கள் மற்றும் சுகாதார சேவை நிறுவனத்தை 1989ஆம் ஆண்டு தொடங்கினார். 2014ஆம் ஆண்டில் அழகு மற்றும் ஆரோக்கியத் துறை திறன் மன்றத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டவர். இவரது சொத்து மதிப்பு சுமார் 1300 கோடி ரூபாய்.
எம்க்யூர் பார்மா நிறுவனத்தைத் தொடங்கியவர் மும்பையைச் சேர்ந்த நமீதா தாப்பர். கடந்த ஆண்டு போர்ப்ஸ் வெளியிட்ட ஆசியாவின் சக்திவாய்ந்த 20 பெண் தொழிலதிபர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர். இவரது சொத்து மதிப்பு சுமார் 700 கோடி ரூபாய்.வினீதா சிங் 2012ஆம் ஆண்டு சுகர் காஸ்மெடிக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். டெல்லியைச் சேர்ந்த இவர் சென்னை ஐஐடியில் படித்தவர். அழகு சாதனங்களுக்கான இந்நிறுவனம் 2019ஆம் ஆண்டு சிறந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்துக்கான விருதைப் பெற்றது. இவரது சொத்து மதிப்பு ஏறத்தாழ 300 கோடி ரூபாய்.
1978ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது ஷானஸ் நிறுவனம். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷானஸ் ஹுசைன் இதன் நிறுவனர். மூலிகைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. 2006ஆம் ஆண்டு பத்மஶ்ரீ விருது ஷானஸின் சொத்து மதிப்பு சுமார் 250 கோடி ரூபாய். மாமா எர்த் நிறுவனத்தின் இணை நிறுவனர் கஜல் அலக். மாமா எர்த் நிறுவனம் அழகு சாதனங்கள் தயாரித்து விற்பனை செய்துவருகிறது. 2021ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் சிறந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் என்று பெயர் பெற்றது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கஜல் அலக்கின் சொத்து மதிப்பு சுமார் 150 கோடி ரூபாய்.
தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமலதா அண்ணாமலை 2008ஆம் ஆண்டு ஆம்பியர் நிறுவனத்தைத் தோற்றுவித்தவர். ஆம்பியர் மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும்.ஹரியானாவைச் சேர்ந்த ராதிகா அகர்வால் ஷாப்களூஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர். 2016ஆம் ஆண்டின் சிறந்த பெண் தொழில்முனைவோர் விருது இவருக்கு அளிக்கப்பட்டது. இவரது சொத்து மத்திப்பு 50 கோடி ரூபாய். எழுத்தாளரான அதிதி குப்தா ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் எழுதிய Menstrupedia Comic என்ற நூல் மாதவிடாய் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பேசுகிறது. 2014ஆம் ஆண்டு போர்ப்ஸ் வெளியிட்ட 30 வயதுக்கு உட்பட்ட 30 இந்தியர்கள் என்ற பட்டியலில் இவரது பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. இவரது சொத்து மதிப்பு சுமார் 40 லட்சம் ரூபாய்.