மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை. இந்த சூழலில் தேர்தல் பிரச்சாரத்திற்காக மக்களை சந்திக்கும் முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என அனைவரையும் ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் சூழ்ந்து மகளிர் உரிமைத் தொகை பயனாளர்களாக இணைய முடியவில்லை என்று புகார் தெரிவித்தனர்.
இந்த திட்டத்தை செயல்படுத்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதற்கு முன்னர் விண்ணப்பித்த ஒரு கோடியே 63 லட்சம் பேருக்கும் மகளிர் உரிமைத் தொகை கட்டாயம் வழங்கப்படும். தேர்தல் முடிந்த பின்னர் அதற்கான பணிகள் தொடங்கும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களுக்கு நம்பிக்கையூட்டி வருகிறார். மேலும், தேர்தலுக்குப் பிறகு பயனாளர்கள் அதிகரிக்கப்படுவார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் கூறுகிறாரே அது சாத்தியமா என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழாமல் இல்லை. ஆனால், சாத்தியம் தான் என்று கூறியுள்ளார் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.
ராமநாதபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, திருச்சுழி ஒன்றியம், பூலாங்கால், பரளச்சி, தொப்பலாக்கரை, ம.ரெட்டியாபட்டி, கல்லுாரணி, மற்றும் ஆலடிபட்டி ஆகிய பகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிந்ததும் விடுபட்ட அனைவருக்கும் மாதம் 1000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் கட்டாயம் வழங்கப்படும்” என்று உறுதியளித்துள்ளார்.
Read More : மக்களவை தேர்தலோடு விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல்..? சத்யபிரதா சாஹூ சொன்ன முக்கிய தகவல்..!!