மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக, தமிழ்நாடு முழுவதுமிருந்து 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சார் ஆட்சியர், துணை ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர்கள் பரிசீலித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் அமைச்சர் உதயநிதியின் நடவடிக்கைகள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இரண்டு நாளைக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் பணிகளை உதயநிதி ஆய்வு செய்திருந்தார்.
அப்போது, மேல்முறையீடு செய்திருந்த 3 பெண்களுக்கு போனை போட்டு பேசினார். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை அவர்களிடம் எடுத்து சொன்னார். அதன் நியாயத்தை உணர்ந்து, உதயநிதி சொன்னதையும் அந்த பெண்கள் ஏற்றுக்கொண்டனர். இந்த தகவலை உதயநிதியே தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதுமட்டுமல்ல, உரிமைத் திட்ட விதிகளை பூர்த்தி செய்கிற, ஒரு மகளிர் கூட, விடுபட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையில் பணியாற்றிட அரசு அலுவலர்களை கேட்டுக் கொண்டிருப்பதாகவும் உதயநிதி கூறியிருந்தார். நேற்றுகூட, இந்த உறுதியை உதயநிதி அளித்துள்ளார். நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாநகராட்சி வர்த்தக மையத்தில் நடந்தது. அப்போது மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளர்களுக்கு 1200 மகளிர் உரிமைத் தொகை டெபிட் கார்டுகளை உதயநிதி வழங்கியதுடன், 9 ஆயிரம் பயனாளிகளுக்கு 157 கோடியே 33 லட்சம் அளவில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
அப்போது பேசிய அவர், ’இதுவரை 1 கோடியே 6 லட்சத்து 58 ஆயிரம் மகளிருக்கு இந்த உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. நெல்லையில் மட்டும், கிட்டத்தட்ட 2 லட்சத்து 48 ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளனர். ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய திட்டம் செயல்படுத்தப்பட்டது, இதுவே முதல்முறை. இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி தான் உங்களுக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கான தேதி என்றாலும், ஒரு நாள் முன்னதாக 14ஆம் தேதியே வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், உங்கள் மேல்முறையீட்டை பரிசீலிக்க துணை ஆட்சியர், சார் ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர்களுக்கு பயிற்சிகளை வழங்கியிருக்கிறோம். மகளிர் மட்டுமன்றி திருநங்கையர், மாற்றுத்திறனாளிகளும் இன்றைக்கு இந்த திட்டத்தால் பயன்பெற்று வருகின்றனர். மேல்முறையீடு செய்வதற்கான காலம் முடிவடைந்த நிலையில், அந்த மேல்முறையீட்டு மனுக்களின் மீதான பரிசீலனையை சாத்தூர் கோட்டத்தில் ஆய்வு செய்தோம். நான் சட்டமன்றத்தில் பேசியது போல், தகுதியுள்ள ஒரு மகளிர் கூட இந்த திட்டத்தில் இருந்து விடுபட்டு விடக் கூடாது என்ற எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறோம்” என்றார்.