Women’s T20 World Cup: மகளிர் டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி நியூசிலாந்து அண் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் முடிந்து தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடந்து வருகின்றன. அந்தவகையில் ஷார்ஜாவில் இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெற்றது. இதில் நியூசிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஜார்ஜியா பிளிம்மர் அதிக பட்சமாக 33 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் தியேந்திரா டோடின் 4 விக்கெட்டும், பிளெட்சர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. முன்னணி வீராங்கனைகள் விரைவில் வெளியேறினர். அந்த அணியின் தியேந்திரா டோடின் ஓரளவு போராடி 33 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுக்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் நியூசிலாந்து 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.