தனது ஊழியர்களை வாரத்தில் ஒரு நாள் மட்டும் அலுவலகத்திற்கு வருமாறும், மீதி நாள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறும் மீஷோ நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா லாக்டவுன் சமயத்தில் பல நிறுவனங்கள், கடைகள் இயங்காமல் போக நஷ்டம் வரத்துவங்கியபோது, பிரபலமடைந்த விஷயம் தான் ஒர்க் ஃபிரம் ஹோம் (Work From Home). வீட்டிலிருந்தபடியே தனது ஊழியர்களை நிறுவனம் வேலைவாங்கும் திட்டம்தான் இது. இது பல நிறுவனங்களுக்கு ஏற்புடையதாக இருந்தாலும் ஒரு சில வேலைகளுக்கு கடினம்தான். ஆனால், ஒன்றுமே இல்லாமல் இருப்பதற்கு இது தேவலாம் என்று கருதிய நிறுவனங்களை, அட இது நல்லாருக்கே இப்படியே கண்டின்யு பண்ணுவோம் என்று நினைக்க வைத்ததுதான் லாக்டவுன் செய்த மற்றுமொரு சாதனை. வீட்டில் இருந்து ஊழியர்கள் வேலை செய்தாலும் தொய்வின்றி இயங்கிய நிறுவனங்கள் ஒர்க் ஃபிரம் ஹாம் என்னும் திட்டத்தைப் பற்றிக்கொண்டன.

ஆபீஸ் வாடகை, கரண்ட் பில், வைஃபை பில், செக்யூரிட்டி என்று எதுவும் இல்லாமல் வேலை சீரும் சிறப்புமாக நடைபெறுவதை கவனித்த நிறுவனங்களுக்கு அதுவே பழகிப்போக, பல நிறுவனங்கள் இன்னும் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கின்றன. இவற்றில் ஒன்றுதான் E-commerce நிறுவனமான மீஷோ. வாரத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் அலுவலகம் வர வேண்டும் என்று திட்டமிட்டுள்ள அந்த நிறுவனம் மீதமுள்ள நாட்களில் வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்கிறது. ஜூன் 1, 2023 முதல் இந்த ஃப்ளெக்ஸி மாடலைப் பின்பற்றுவதாக மீஷோ நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த ஒரு வருடமாக மீஷோ நிறுவனம் வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தின் கீழ் தான் இயங்கி வருகிறது. இவ்வளவு நாட்கள் வீட்டிலிருந்து மட்டுமே வேலை செய்து வந்த ஊழியர்களிடம் அலுவலகம் திறப்பது குறித்து கருத்து கேட்டபோது அவர்களும் தங்களுக்குள் ஒரு புரிதல், இணக்கம் ஏற்படுவதற்கும், வேலையை குழுவாக முடிப்பதற்கும், விரைவாக முடிப்பதற்கும் அலுவலகம் வருவது நல்லது என்று பெரும்பாலானோர் கூறியுள்ளனர். அதனால் பெங்களூருவில் சொத்து விலைகள் அதிகரித்து, அனைத்து நிறுவனங்களும் தங்கள் அலுவலகங்களை வேகமாகத் திறக்கும் நேரத்தில் மீஷோ தனது ஊழியர்களை (Meesho Employees) அலுவலகத்திற்கு அழைப்பதாக அறிவித்துள்ளது. கணக்கெடுப்புக்குப் பிறகே ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது.

இத்துடன் அலுவலகம் வரும் ஊழியர்களுக்கு பல நிதி வசதிகளும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பெங்களூருக்கு வரும் E-commerce நிறுவன ஊழியர்களுக்கு பயணச் செலவு, சரக்கு போக்குவரத்து, பள்ளியில் மீண்டும் சேர்க்கை மற்றும் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பராமரிப்பு வசதி ஆகியவை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது தவிர, மற்ற வசதிகளையும் நிறுவனம் வழங்கலாம் என்று தெரிகிறது. நிறுவனத்திற்குள் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதில் பெரும்பாலான மக்கள் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்க விரும்புகிறார்கள் என்றும் ஒன்றிணைந்து வேகமாக வேலை செய்ய விரும்புகிறார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதால் கணக்கெடுப்பில், பெரும்பாலான ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய ஒப்புக்கொண்டுள்ளனர்.