பெண்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவர்களை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்யும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. இந்த குற்றங்களில் ஈடுபடுவோரை போலீசார் கைது செய்து நீதிமன்றங்கள் வழியாக சிறை தண்டனை வாங்கிக் கொடுக்கின்றனர். இருப்பினும் கூட சிலர் பெண்களிடம் தவறாக நடந்து வருகின்றனர். அந்த வகையில், ராஜஸ்தானில் தற்போது நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 பெண்களை 2 பேர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி முனிசிபல் கவுன்சில் தலைவராக இருப்பவர் மகேந்திர மேவாடா. அதேபோல் சிரோஹி முன்சிபலின் முன்னாள் ஆணையாளர் மகேந்திர சவுத்ரி. இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். இதற்கிடையே தான் பாலி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் போலீசில் அவர்கள் மீது பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ”மகேந்திரா மேவாடா, மகேந்திர சவுத்ரி ஆகியோர் பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்து மிரட்டி வருகின்றனர். அங்கன்வாடி பணியை பெற்று தருவதாக கூறி இருவரும் மோசடி செய்து வருகின்றனர்.
அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாக கூறி என்னையும் ஏமாற்றி பலாத்காரம் செய்துவிட்டனர். வேலை தருவதாக கூறி என்னை அழைத்தனர். நான் அவர்கள் அழைத்த இடத்துக்கு சென்றேன். அப்போது அவர்கள் எனக்கு உணவு, தங்குமிடம் ஏற்படுத்தி கொடுத்து பலாத்காரம் செய்தனர். சாப்பிடும் உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இந்த தவறை செய்தனர். மேலும், அவர்கள் வீடியோ எடுத்து அதனை வெளியிடுவதாக மிரட்டுகின்றனர். ரூ.5 லட்சம் தர வேண்டும். இல்லாவிட்டால் வீடியோவை இணையதளங்களில் வெளியிடுவதாக மிரட்டுகின்றனர். இவர்கள் 2 பேரும் அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 20 பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்து மிரட்டுகின்றனர்” என தெரிவித்துள்ளார்.
இதுபற்றி காவல்துறை துணை கண்காணிப்பாளர் பராஸ் சவுத்ரி கூறுகையில், ”இந்த சம்பவம் தொடர்பாக இதற்கு முன்பு புகார் வந்தது. ஆனால், பொய் புகார் என தெரிந்தது. ஆனால், இப்போது 8 பெண்கள் புகார் அளித்துள்ளனர். இதுபற்றி ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம்” என்றார்.