‘அதிமுகவினர் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியை நான் தொடங்கி விட்டேன்’ என வி.கே.சசிகலா பேசியுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் ஆதரவற்றோர்களுடன் வி.கே
சசிகலா கிறிஸ்துமஸ் கொண்டாடிய பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”அதிமுகவினர் அனைவரையும் நான் ஒன்றிணைப்பேன். பழனிசாமி, பன்னீர்செல்வம் தான் தனித்தனியாக செயல்படுகின்றன. நான் அப்படியல்ல. பெங்களூரில் இருந்து வெளிவந்த போது கூறியதையே இப்போதும் சொல்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம். ஒரு தாய் போல அனைவருக்கும் பொதுவான ஆளாக நான் இருக்கிறேன். அதிமுக தொண்டர்களை நான் பிரித்துப் பார்க்கவில்லை.

அத்துடன், கட்சியில் தொண்டர்கள் எடுக்கும் முடிவே நிரந்தரமானது. எனக்கு என தனியாக ஆள் இல்லை. எல்லா மாவட்டம், எல்லா இனத்தவறும் எனக்கு ஒருதாய் மக்கள் தான்.
நான் இருக்கும் வரை அதிமுக தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள். அதிமுகவினர்
அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியை நான் தொடங்கி விட்டேன். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தனக்கு பிறகு தலைமைப் பொறுப்பில் யாரை நியமித்தால் சரியாக இருக்கும் என ஜெயலலிதாவுக்கு தெரியும். அதற்கான பணியில் அவர் ஈடுபட்டு வந்த நிலையில் தான் எதிர்பாராத வகையில் திடீரென இறந்து விட்டார். பெங்களூருக்கு சிறை செல்லும் முன்பு அதிமுகவை ஆட்சியில் அமர்த்தி விட்டு செல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன். எல்லோர் மனதும் ஒரே மாதிரியாக இருக்காது, நான் எந்த உயரம் சென்றாலும் என் பாதத்தை பார்த்தே நடப்பேன்” என்றார்.