கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்த 3-வது லீக் போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, 4-வது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 428 ரன்கள் எடுத்து உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
இந்தப் போட்டியைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு உலகக் கோப்பை 8ஆவது லீக் போட்டி நடக்க இருக்கிறது. இதில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் போட்டிக்காக போலீஸ் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட மற்ற அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் விளையாடும் போட்டிக்காக சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உலகக் கோப்பைக்காக இந்தியா உள்பட மற்ற அணிகள் விளையாடும் போட்டிக்காக இன்று (அக்.8), 13ஆம் தேதி, 23 மற்றும் 27ஆம் தேதிகளில் சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி வரையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது ஒரு புறம் இருக்க, சென்னையில் நடைபெறும் போட்டியை பார்க்க வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மெட்ரோவில் இலவச பயணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மெட்ரோ ரயில் நிறுவனமும், தமிழ்நாடு கிரிக்கெட் வாரியமும் இணைந்து இலவச மெட்ரோ ரயில் பயணத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. Book My Showல் டிக்கெட் புக்கிங் செய்தவர்கள் மெட்ரோ ரயில் கவுண்டரில் டிக்கெட்டை பெற்று இலவசமாக பயணம் செய்யலாம். ஆனால், ஒரு கண்டிஷன். அதாவது, போட்டியை காண வரும் ரசிகர்கள் போட்டி முடிந்து திரும்பும் போது சென்னை மெட்ரோவில் இலவசமாக பயணிக்க முடியும்.
போட்டி முடிந்த பிறகு அரசினர் தோட்டம் Government Estate Metro மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு இலவசமாக பயணம் செய்யலாம். ஆனால், அரசினர் தோட்டம் வருவதற்கான டிக்கெட்டை ரசிகர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்படுள்ளது. இதேபோல், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடும் போட்டிக்காக வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. வரும் 14ஆம் தேதி குஜராத் மாநிலத்திற்கு அருகாமையிலுள்ள ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலிருந்து வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.