உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோஷிய அணி, 2-1 என்ற கோல்கணக்கில் மொராக்கோ அணியை வீழ்த்தி, மூன்றாம் இடம் பிடித்தது. 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் யார் சாம்பியன் என்பதை உறுதி செய்ய இன்னும் ஒரு போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது. இந்நிலையில், அரையிறுதியில் தோல்வியை தழுவிய குரோஷியா – மொராக்கோ அணிகள் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் மோதின. இப்போட்டி, அல்ரயான் நகரில் உள்ள கலிஃபா சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. போட்டி தொடங்கியது முதலே இரு அணிகளும் வேகம் காட்டின. ஆட்டத்தின் 7-வது நிமிடத்திலேயே குரோஷிய வீரர் பெரிசிச் லாவமாக கொடுத்த பந்தை, சக வீரர் குவார்டியல் தலையால் முட்டி அற்புதமாக கோல் அடித்து அசத்தினார்.
முதல் கோலை பதிவு செய்த உற்சாகத்தில் இருந்த குரோஷிய அணிக்கு, அடுத்த இரண்டு நிமிடங்களில் அதிர்ச்சி காத்திருந்தது. மொராக்கோ வீரர் அச்ரஃப் டேரி பதில் கோல் அடித்து மிரட்டினார். இரு அணிகளும் சமநிலையை எட்டியதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது. 42-வது நிமிடத்தில் பெனால்டி பாக்ஸ் அருகில் இருந்து குரோஷிய வீரர் ஓர்சிச் , அடுத்த கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார்.
இதையடுத்து, தற்காப்பு ஆட்டத்தில் குரோஷிய அணி கவனம் செலுத்தியதால், கடைசி வரை போராடியும் மொராக்கோ அணியால் மேலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால், 2-1 என்ற கோல்கணக்கில் குரோஷிய அணி வெற்றிபெற்றது. தோல்வியை தழுவிய மொராக்கோ அணி, அரையிறுதி வரை முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற ஆறுதலுடன் தாயகம் திரும்புகிறது.