உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்தான இன்கோவாக் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் தடுக்க பல்வேறு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் 2 தவணைகளாகவும் பூஸ்டர் டோசாகவும் போடப்படுகிறது. உலக அளவில் பைசர் உள்ளிட்ட ஏராளமான தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்தாலும் இந்தியாவில் கோவேக்ஷின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளே அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. இதன் அடுத்த கட்டமாக நாசி வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மூக்கு வழியே செலுத்தப்படக்கூடிய இந்த கொரோனா தடுப்பு மருந்துக்கு இன்கோவாக் என பெயரிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், இன்கோவாக் தடுப்பு மருந்தை பூஸ்டர் டோஸாக எடுத்துக் கொள்ளலாம். தடுப்பூசியே போடாதவர்கள், இரண்டு தவணை கொரோனா தடுப்பு டோஸாக இன்கோவாக்கை நாசி வழியாக எடுத்து கொள்ளலாம். 28 நாட்கள் இடைவெளியில் இந்த தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பூஸ்டர் டோஸ் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் இந்த நாசி வழி தடுப்பூசியை எடுத்துக்கொள்ள முடியாது.
உலகின் முதல் நாசி வழி தடுப்பு மருந்தான இன்கோவாக் இந்தியாவின் குடியரசு தினமான இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த தடுப்பு மருந்தை அறிமுகம் செய்து வைத்தனர். இந்த மருந்து அரசுக்கு ரூ.325 என்ற விலையிலும் தனியார் மருத்துவமனையில் ரூ. 800 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இன்கோவாக் தடுப்பு மருந்து மூக்கின் சளி சுரப்பியில் கொரோனா தொற்று உருவாகும் இடத்தில் இருந்து நோய் எதிர்ப்பு திறனை உருவாக்க கூடியது. சுவாசக்குழாய்களில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் இந்த தடுப்பு மருந்தை எளிதாக மூக்கு வழியாக செலுத்த முடியும். இந்த தடுப்பு மருந்தை 18-வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தலாம்.