தவெக நிர்வாகியின் காதல் தொல்லையால் 8ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி சரவணன். இவர், அதே பகுதியில் வசித்து வந்த 8ஆம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மேலும், தன்னை காதலிக்க வேண்டுமென மாணவியை தொடர்ந்து தொல்லை செய்து வந்துள்ளார். இதுகுறித்து, மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, மாணவியின் தாயார், சரவணனின் பெற்றோரிடம் கூறி கண்டித்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று பள்ளி மாணவியை வழிமறித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மீண்டும் வற்புறுத்தியுள்ளா சரவணன். நாளுக்கு நாள் இவரது தொல்லை அதிகமானதால், செய்வதறியாது திகைத்துப் போன மாணவி, மன உளைச்சலுக்கு ஆளாகி தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
இதையடுத்து, மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், தவெக நிர்வாகி சரவணன் மற்றும் அவரது சகோதரி சங்கீதா ஆகியோர் மீது பெண் குழந்தைக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சரவணனை கைது செய்த போலீசார், தலைமறைவாகவுள்ள அவரது சகோதரியை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஏற்கனவே புகார் கொடுத்தபோது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று மாணவியின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார்.