தமிழ்நாடு அரசின் 2023-2024ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை கடந்த மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வாசித்தார். இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகளும் வெளியானது. அதில் குறிப்பாக, அனைவரும் எதிர்பார்த்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 முதல் தொடங்கும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார். தற்போது பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், போக்குவரத்து துறை மற்றும் இயக்கூர்திகள் சட்டங்கள் நிர்வாக துறை தொடர்பான மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது.
அப்போது பேசிய அமைச்சர் சிவசங்கர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏற்கனவே மத்திய அரசால் ரூ.5,000 வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இது பற்றி சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் சிவசங்கர், சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவும் நற்கருணை வீரர்களுக்கு மாநில அரசின் பங்களிப்பாக சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்