2024ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 51% ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
தீபாவளிக்கு முன் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் போனஸ் அகவிலைப்படி உள்ளிட்டவைகள் குறித்து மத்திய அரசு இனிப்பான செய்திகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில், வரப்போகும் புத்தாண்டில் இன்னும் சிறப்பான பரிசுகளை அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 1, 2023 முதல், அகவிலைப்படி 46 சதவீதமாக திருத்தப்பட்டது. இதற்குப் பிறகு, 2024 ஜனவரியில் அகவிலைப்படி மீண்டும் திருத்தப்படும். இந்தத் திருத்தம் இன்றுவரை செய்யப்பட்ட அகவிலைப்படி திருத்தங்களில் மிகப்பெரிய திருத்தமாக இருக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2024 ஆம் ஆண்டில் புதிய சம்பள கமிஷன் தொடர்பாக சில உறுதியான விவாதங்கள் நடைபெற உள்ளன. மேலும், அகவிலைப்படி (Dearness Allowance) 50 சதவீதத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், கடந்த மாதங்களில் அகவிலைப்படி 4 முறை 4% உயர்த்தப்பட்டது. ஆனால் கடந்த ஜூலை மாதத்தில் 46% ஆக இருந்த அகவிலைப்படியை திருத்தம் செய்யப்பட்டு புத்தாண்டில் அதாவது 2024 ஜனவரியில் 51% ஆக அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. குறிப்பாக இதுவரையில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊதிய உயர்வில் இதுதான் அதிகபட்ச ஊதிய உயர்வாகும்.
தற்போதைய நிலவரத்தின்படி, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் வெளியாகியுள்ளன. விரைவில் செப்டம்பர் மாதத்திற்கான புள்ளி விவரங்களும் வெளியாகும். தற்போது குறியீட்டு எண் 139.2 புள்ளிகளில் உள்ளது. இதன் காரணமாக அகவிலைப்படி 47.98 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்த எண்ணிக்கை செப்டம்பரில் 48.50 சதவீதத்தை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் தரவுகள் ஜனவரி 2024 இல் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பதைத் தீர்மானிக்கும். இருப்பினும், இதற்கு நாம் டிசம்பர் 2023 ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் வரும்வரை காத்திருக்க வேண்டும்.