Washing Machine: சீனா, இந்தோனேஷியா நாடுகளில் உள்ளதை போன்று, பெண்களின் வசதிக்காக பொது இடங்களில் வாஷிங் மெஷின் பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கர்நாடக ராம்நகர் காங்கிரஸ் – எம்.எல்.ஏ., இக்பால் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
தொகுதி மக்களுக்கு எந்த வகையிலும் சேவை செய்து காண்பிக்கலாம். அனைவரின் ஒத்துழைப்பைப் பெற்று, வளர்ச்சி பணிகளை மேற்கொள்வோம். 25 ஆண்டுகளாக நடத்தப்படாத பணிகளை, இப்போது நடத்துவது எனக்கு சவாலாக உள்ளது. அடிப்படை வசதிகள், குடிநீர் வழங்குவது, 157 கோடி ரூபாய் செலவில் அர்க்காவதி ஆற்றங்கரையில் பூங்கா அமைப்பது, மாவட்ட விளையாட்டு அரங்கம் சீரமைப்பு உட்பட, பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குடியிருப்பு இல்லாத மக்களுக்கு, 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீடுகள் கட்டித்தரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குடியிருப்பு கோரி, 13,000 மனுக்கள் வந்துள்ளன.
காங்கிரஸ் அரசு கண்களை மூடி அமர்ந்திருக்கவில்லை. ஜாதி, மதம் வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் செயல்படுத்திய ஐந்து திட்டங்களுக்காக, ஒருவருக்கு ஆண்டுக்கு 60,000 ரூபாய் செலவிடுகிறது. பொதுவாக பெண்கள், துணி துவைக்க ஆற்றங்கரை அல்லது ஏரிக்குச் செல்வர். இவர்களுடன் சிறு குழந்தைகளும் செல்கின்றன. பல இடங்களில் துணி துவைக்க சென்று, நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ளன. எனவே பெண்களின் வசதிக்காக, பொது இடங்களில் வாஷிங் மெஷின்கள் பொருத்த திட்டம் வகுத்துள்ளோம்.
ராம்நகரின் இரண்டு வார்டுகளில், சோதனை முறையில் இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். ஹைஜூரு சதுக்கம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில், 10 வாஷிங் மெஷின்கள் பொருத்த இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. சீனா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில், இத்தகைய திட்டம் அமலில் உள்ளது. இதே திட்டம் ராம்நகருக்கு கொண்டு வரப்படும். இது, பெண்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறினார்.