நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, ஓராண்டாகும் நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து பணியாற்றி வருகிறார். விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும், விஜய் Work From Home அரசியல் வாதியாக இருப்பதாக பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
எனினும் முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் விஜய், நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். கட்சி உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் அதேவேளையில், தேர்தல் வியூகங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், மார்ச் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தான், நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கியது மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. Y பிரிவில் சிஆர்பிஎஃப் பாதுகாப்பு அதிகாரிகள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 காவலர்கள் இருப்பார்கள். தமிழ்நாட்டிற்குள் இந்த பாதுகாப்பு விஜய்க்கு வழங்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.