கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளாவில் அடுத்த இரு தினங்களுக்கு பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இடுக்கி, எர்ணாகுளம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 10 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே, பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், குறிப்பிட்ட வானிலை எச்சரிக்கை எதுவும் இல்லாத திருவனந்தபுரம் போன்ற மாவட்டங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.