மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் கலை, பண்பாட்டு பிரிவு மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து ரஞ்சனா நாச்சியார் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், தவெகவின் 2ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்றுள்ளார்.
ரஞ்சனா நாச்சியார் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், ”விடை பெறுகிறேன். கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக பாஜகவில் பணியாற்றிய உங்கள் ரஞ்சனா நாச்சியாராகிய நான் விடை பெறுகிறேன். அனைத்து பொறுப்புகளில் இருந்தும் என்னை நான் இன்றோடு விடுவித்துக் கொள்கிறேன். தேசப்பற்று மிகுந்த கட்சி, தேசியத்தை காக்கும் கட்சி என்றெல்லாம் கடமையாற்றிவிடலாம் என நினைத்து தான் இந்த கட்சியில் இணைந்தேன். ஆனால், நாட்டு மக்களுக்கு நன்மை பயக்காமல் ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருங்கி போவதில் எனக்கு உடன்பாடு இல்லை.
மும்மொழிக் கொள்கை திணிப்பு, தமிழகம் புறக்கணிப்பு என்றெல்லாம் ஒரு தமிழச்சியாக என்னால் ஏற்றுக் கொண்டு உங்களுடன் இயங்க முடியவில்லை. அனைத்து பொறுப்பிலும் நான் சிறப்பாக செயல்பட்டேன். ஆனால், என்னை சிறப்பாக இயக்க இந்த இயக்கம் தவறிவிட்டது. முன்னேற்றத்தை தடுத்து முட்டுக்கட்டை போடுவது பெண்களின் அரசியல் இருப்பை கேள்விக்குறியாக்குகிறது.
எனவே எனக்கென்று ஒரு இயக்கம், ஒரு கழகம், பெண்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை தரும் தலைமை, இனி இதுவே என் கடமை என்கிற பயணத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கிவிட்டேன். இனி மக்கள் சேவையில் என் புதிய பாதையில், புரட்சி பயணம்.. அது எழுச்சி பயணம் வரும் காலங்களில் இனி அதுவே வெற்றிப் பயணம்.. அன்புடன் ரஞ்சனா நாச்சியார்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவுக்கு ரஞ்சனா நாச்சியார் வருகை தந்துள்ளார். பாஜகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்காக விழாவுக்கு வந்துள்ளார். தவெக 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு நன்மைகள் செய்ய காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
Read More : மார்ச் 5இல் அனைத்துக் கட்சி கூட்டம்..!! விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த CM ஸ்டாலின்..!!