தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (மார்ச் 14) கூடிய நிலையில், 2025-26ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள், துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரம் உள்ளிட்டவை குறித்து அறிவித்தார்.
அந்த வகையில், சென்னை அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம், பெண்களின் பெயரில் பத்திரப் பதிவு செய்தால் பதிவுக் கட்டணம் 1% குறைவு, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மீண்டும் விண்ணப்பிக்க விரைவில் வாய்ப்பு வழங்கப்படும், தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்ட 1,000 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.7 ஆயிரம் நிதி வழங்கப்படும், அரசு ஊழியர்கள் தங்களின் ஈட்டிய விடுப்பில் வருடந்தோறும் 15 நாட்களை ஒப்பளிப்பு செய்து பணமாக மாற்றிக் கொள்ளலாம் என்பது போன்ற முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உரையின் முடிவில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ”நூற்றாண்டு கண்ட இந்த சட்டமன்றப் பேரவையின் மகத்தான தலைவர்களுள் ஒருவரான முதலமைச்சர் அவர்களின் தலைமையில், எல்லோருக்கும் எல்லாம் என்பதை உறுதி செய்திட வேண்டும். தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளம் அமைக்க நாம் இருமடங்கு உழைக்க வேண்டும். இந்த வரவு, செலவுத் திட்டத்தினைச் செதுக்கிடத் தேவையான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் நல்கிய முதலமைச்சருக்கு மீண்டும் எனது மனம் நிறைந்த நன்றியும், பாராட்டுகளும். வாழ்க தமிழ்… வெல்க தமிழ்நாடு” என்று கூறி தனது 2.33 மணி நேர உரையை நிறைவு செய்ததும், முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு அமைச்சர் துரைமுருகன் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.