மதுரை அருகே நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசுகையில், அண்ணாமலை, அண்ணாவை பற்றி பேசியதற்கு திமுக குரல் கொடுக்கவில்லை என்கிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. ஆனால், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதல் நாளே கண்டனம் தெரிவித்துவிட்டார். சில பேருக்குதான் நாம் கண்டனம் தெரிவிக்க வேண்டும். சில பேரை எல்லாம் உதாசீனப்படுத்திவிட்டு போய்க் கொண்டிருக்க வேண்டும்.
திமுக தோற்றுவிக்கப்பட்டதே சனாதனத்தை ஒழிக்கத்தான். சனாதனத்தை ஒழிக்கும் வரை போராடித்தான் ஆக வேண்டும். செல்லூர் ராஜூ உட்பட அதிமுகவினர் சனாதனம் குறித்து அண்ணா எழுதியதை, பேசியதை படித்திருக்கிறீர்களா? அண்ணா சனாதனம் குறித்து பேசியதை, எழுதியதை அண்ணா திமுகவினர் பேசுவதற்கு தைரியம் இருக்கிறதா?
சனாதனம்னா என்ன? என இப்போது பல பேர் கேட்கின்றனர். சனாதனம் என்பது வேறு ஒன்றுமே இல்லை. புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டது. இந்தியாவின் முதல் பிரதிநிதி யாரு? நம்முடைய ஜனாதிபதி திரவுபதி முர்மு. கடந்த மாதம் புதிய நாடாளுமன்றத்தைத் திறந்தனர். இங்கிருந்து சாமியார்களை தனி விமானத்தில் அழைத்துக் கொண்டு போனார்கள். அவர்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் என்ன தொடர்பு? நாடாளுமன்றம் என்பது என்ன? மக்கள் பிரதிநிதிகள் போய் மக்கள் பிரச்சனைகளைப் பேசும் இடம்தான் நாடாளுமன்றம். அந்த இடத்துக்கு சாமியார்களை எல்லாம் கூட்டிகிட்டுப் போனார்கள்.
ஆனால் ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைக்கவில்லை. ஏன் அழைக்கவில்லை? அவங்க மலைவாழ் மக்கள். அதுமட்டுமல்ல கணவரை இழந்தவர். அதனால் கூப்பிடவில்லை. நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா வருகிறது. அதற்கு இந்தி நடிகை எல்லாம் கூப்பிட்டு போய் இருக்கின்றனர். ஆனால், ஜனாதிபதியை கூப்பிடவில்லை. ஏன்? கணவரை இழந்தவர் என்ற காரணத்தாலேயே ஜனாதிபதியை நாடாளுமன்றத்துக்கு மத்திய பாஜக அரசு அழைக்கவில்லை. இதுதான் சனாதனம். நாம் பிறப்பால் எல்லோரும் சமம் என்கிறோம். இதை மறுக்கிற சனாதனத்தை ஒழிப்போம் என்பதுதான் நமது குரல். இதற்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம்“ என்றார்.