தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் – அமுதா தம்பதிக்கு திருமணமாகி ருத்ரா என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட சண்டையில், மனைவி அமுதா காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். அப்போது, சிறப்பு ஆய்வாளராகப் பணியாற்றி வந்த ஜெயக்குமார் என்பவருக்கும், அமுதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மலர்ந்தது.
இதனால் அமுதாவின் கணவர் பிரகாஷ் அவரை பிரிந்து வேறு திருமணம் செய்து கொண்டார். மேலும் சிறப்பு புலனாய்வு அதிகாரி ஜெயக்குமார் அமுதாவுடன் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து கள்ள உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். கேரளாவில் உள்ள தனியார் ஏலக்காய் தோட்டத்திற்கு அமுதா தினமும் சென்று வந்தார். இதனால் அமுதா மீது சந்தேகமடைந்த ஜெயக்குமார், குடிபோதையில் அவரை அடித்து உதைத்துள்ளார். இதனால், அமுதாவுக்கும் ஜெயக்குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 01.03.2023 அன்று அமுதாவின் மகள் ருத்ராவுக்கு தனது தாய் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, அவரது மகள் ருத்ரா சென்று பார்த்தபோது, தாய் அமுதா உயிரற்ற நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து ருத்ரா, கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் அவரது தாயார் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், எனது தாயாரின் சாவுக்கு ஜெயக்குமார் தான் காரணம் என்றும் புகார் அளித்தார். அதன் பேரில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
இந்த கொலை குற்றத்திற்காக ஜெயக்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தேனி மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை தொடர்ந்து குற்றவாளி ஜெயக்குமாரை போலீசார் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.