தருமபுரி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் ; பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் 2020-2021ம் ஆண்டு முதல் 2024-2025 ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மானியம் மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளை பொருள் என்ற முறையிலும் மற்றும் அனைத்து உணவு சார்ந்த தொழில்களுக்கும் (புதிய மற்றும் விரிவாக்கம்) செயல்படுத்தப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் சிறுதானியங்கள் சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கும் உணவு பதப்படுத்தும் மற்றும் உணவு சார்ந்த மதிப்புக் கூட்டு தொழில் தொடங்க விருப்பம் உள்ள தனி நபர், மகளிர் சுய உதவி குழுக்கள், உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் ஆகியோருக்கும், ஏற்கனவே தொழிலில் ஈடுபட்டுள்ள குறு நிறுவனங்களை விரிவாக்கம் செய்தல், புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல், வர்த்தகமுத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில்நுட்பப் பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் உணவு பதப்படுத்தும் சூறு நிறுவனங்களுக்கு தகுதியான திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் தொழில் முதலீடு மற்றும் 90 சதவீதம் கடன் பெற்று அவற்றில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் https://www.mofpi.gov.in/pmfme/enews2.html என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் அல்லது உரிய ஆவணங்களுடன் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், தருமபுரி அலுவலகத்தை நேரில் அணுகலாம். மேலும் விவரங்களுக்கு04342-230892, 89255 33941, 89255 33942, 89255 33940 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.