”எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது என்பதை ஸ்டாலின் உணரும் காலம் விரைவில் வரும்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறேன் என்று, பதவியேற்ற 40 மாதங்களில் 4 முறை வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் முக.ஸ்டாலின், இந்தியாவில் மற்ற மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஈர்த்த முதலீட்டைவிட, மிக மிக குறைவான முதலீட்டை கொண்டு வந்திருக்கிறார்.
17 நாட்கள் அமெரிக்காவில் தங்கி, சைக்கிள் ஓட்டி, சினிமா பார்த்து ஸ்டாலின் ஈர்த்த முதலீடு வெறும் ரூ.7,618 கோடிதான். இதில், பெரும்பாலான முதலீட்டு ஒப்பந்தங்கள் தமிழ்நாட்டில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளின் விரிவாக்கத்திற்காக போடப்பட்டவையே. இந்த முதலீடுகளை, விடியா திமுக அரசு அரசு ஜனவரி, 2024-ல் நடத்திய உலகத் தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் சென்னையிலேயே கையெழுத்திட்டிருக்கலாம்.
அதிமுக அரசு, கடந்த ‘2019 உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியபோது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், கோட் சூட் அணிந்தவர்களை அழைத்து உட்கார வைத்து GIM 2019 நடத்தியதாக’ கேலி பேசினார். நாங்கள் தொழில் முனைவோர்களையும், ‘கோட்’ போட்ட ஸ்டாலினையும் அதுபோன்று கொச்சைப்படுத்த மாட்டோம்.
இந்த 40 மாத கால திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளின் நிலை என்ன..? துவங்கப்பட்ட தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவு..? என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களுக்கான வெள்ளை அறிக்கையினைக் கேட்டேன். இந்த முதலமைச்சரின் செயல்பாடு பூஜ்யம் என்பதால்தான், வெள்ளை அறிக்கையை வைக்க மறுக்கிறார். ‘சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்’ என்ற கிராம பழமொழிதான் பொம்மை முதலமைச்சரின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது.
தன்னுடைய வார்த்தை ஜாலம் மூலம் அனைவரையும் ஏமாற்றிவிடலாம் என்ற கற்பனையில் முதல்வர் முக.ஸ்டாலின் மிதக்கிறார். சிலரை சிலநாள் ஏமாற்றலாம் – பலரை பலநாள் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது என்பதை ஸ்டாலின் உணரும் காலம் விரைவில் வரும்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : காலையில் எழும்போது மன அழுத்தத்துடனேயே இருக்கிறீர்களா..? அப்படினா இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணி பாருங்க..!!