தமிழ்நாட்டில் தற்போது ஹாட் டாப்பிக்காக பேசப்படும் செய்தி, திமுக எம்எல்ஏ-வான கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை செய்து வந்த இளம்பெண் ரேகாவை துன்புறுத்திய சம்பவம் தான். பாதிக்கப்பட்ட ரேகா, கருணாநிதியின் மகன் ஆண்டோ மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோரின் மீது பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளார். மெர்லினா தன்னை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தினார் என ஊடங்களில் பேசி வருகிறார்.
இந்நிலையில், ரேகாவின் குற்றசாட்டுகளை மறுக்கும் விதமாக எம்எல்ஏ-வின் மருமகள் மெர்லின் கண்ணீர் மல்க ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த 2 நாட்களாக என்ன நடக்கிறது என்று புரியவில்லை. நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால்… நிறையப் பேர் மனசாட்சி இல்லாமல் கெட்ட கெட்ட வார்த்தைகளில் எங்களைத் திட்டி வருகிறீர்கள். இந்த செய்திகளால் எங்களுக்கு நிறைய கெட்ட பேர். என்ன நடந்தது என்று புரியாமல் தவறாகப் பேசாதீர்கள்.
அரசியல் பின்னணியில் இருந்து வருகிறோம் என்பதற்காக அடுத்தவர்களை மிரட்டி கொடுமை செய்து வாழும் உலகத்தில் நாங்கள் வாழவில்லை. என்னைச் சுற்றி இருப்பவர்களிடம் கேட்டுப் பாருங்கள். இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் கொச்சையாக, அபாண்டமாக சுமத்தப்பட்ட பழி. என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். 3 நாட்களாக சாப்பிடாமல், தூங்காமல், குழந்தையை பார்க்க முடியாமல் இந்த நிலைமைக்கு ஆளாக்கி விட்டீர்கள்.
ரேகாவை எனது வீட்டில் ஒரு ஆளாக பாவித்து அன்பாக தான் நடத்தினேன். அது அவளுக்கே நன்றாக தெரியும். ரேகாவிடம் என்னால் பேச முடியவில்லை. இந்த ஆடியோ பதிவை ரேகாவிற்கு ஷேர் செய்யுங்கள். ரேகா உனக்கு எதுவும் வேணும்னா அக்கா கிட்ட கேட்டு இருக்கலாமே, இப்படி குடும்பத்தையே டேமேஜ் பண்ணிட்டியே! யார் தூண்டிவிட்டு இப்படி செய்கிறாய் என்று எனக்குத் தெரியல. நீ என் மீது எவ்வளவு அன்பு வச்சிருக்க. நான் உன் மேல எவ்வளவு அன்பு வச்சிருக்கேன்னு உனக்கு நல்லாவே தெரியும்.
என்னையையும், என் கணவரையும், குழந்தையும் பற்றி தவறாக சித்தரித்து விட்டாய். பரவாயில்லை. ஆனால், என் மாமனாரை ஏன் இந்த பிரச்சனையில் இழுத்தாய்? அவர் எவ்வளவு சிரமப்பட்டு அரசியலில் இந்த இடத்தைப் பிடித்திருக்கிறார் என்று தெரியுமா? எங்களை இழுத்தது மட்டுமில்லாமல் எனது மாமனாரையும் இந்த பிரச்சனையில் இழுத்து விட்டுட்டியே… இட்ஸ் நாட் ரைட் மா ” என்று பேசியிருக்கிறார் மெர்லின். இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.