fbpx

இதற்காக அவரை நீங்கள் பாராட்ட வேண்டும்!… தோனி குறித்து சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் நெகிழ்ச்சி!

தோனியின் முழங்காலில் ஏற்பட்ட காயம் தனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால், இது குறித்து அவர் யாரிடமும் எதுவும் கூறவில்லை என்றும் ஒரு போட்டியை கூட தவறவிடவில்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேசியுள்ளார்.

நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 16-வது சீசனை வெற்றி பெற்று 5-வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த சீசன் முழுவதும் முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்த சிஎஸ்கே கேப்டன் தோனி, ஐபிஎல் தொடர் முடிந்ததும் மும்பையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு சொந்த ஊரான ராஞ்சியில் ஓய்வில் இருக்கிறார். இந்த நிலையில், தோனியின் உடல்நிலை குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேசியுள்ளார். அவர் கூறுகையில், சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனியின் முழங்காலில் ஏற்பட்ட காயம் தனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால், இது குறித்து அவர் யாரிடமும் எதுவும் கூறவில்லை.

முழங்காலில் காயம் இருந்தும், ஐபிஎல் தொடரில் தோனி ஒரு போட்டியை கூட தவறவிடவில்லை, அனைத்து போட்டிகளிலும் விளையாடினார். அவர் அணியை முன்னணியில் இருந்து சிறப்பாக வழிநடத்தினார். தோனியிடம் இந்த சீசனில் விளையாட முடியுமா என நாங்கள் கேட்கவில்லை. அவரால் விளையாட முடியவில்லை என்றால் எங்களிடம் நேரடியாக சொல்லி இருப்பார். இறுதிப்போட்டி வரை அவர் எங்களிடம் முழங்கால் காயம் குறித்து எதுவும் பேசவில்லை. எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், ஓடும்போது அவர் சிரமப்படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஆனால், ஒருமுறை கூட அதுதொடர்பாக அவர் பேசியது இல்லை. அணிக்கான அவரது அர்ப்பணிப்பு, அவரது தலைமையால் அணி எவ்வாறு பயனடைகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கு, நீங்கள் அவரை பாராட்டியே ஆக வேண்டும்.

இறுதிப் போட்டி முடிந்ததும், சரி, நான் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறேன் என்றார். தற்போது தோனி அறுவை சிகிச்சை செய்துகொண்டார், அவர் மிகவும் வேகமாக குணமடைந்து வருகிறார். 5வது ஐபிஎல் பட்டத்தை வென்ற பிறகு, இது சிறந்த நேரம், சிறந்த தருணம் என்று தோனி கூறினார். தனது உடல் அனுமதித்தால் “குறைந்தபட்சம்” இன்னும் ஒரு ஐபிஎல் சீசனில் விளையாடுவேன், அதற்கும் இன்னும் பல மாதங்கள் உள்ளது என்றார். அடுத்த ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு இன்னும் 9 மாதங்கள் உள்ளன, அறுவை சிகிச்சை செய்துகொண்ட தோனி ஓய்வுக்கு பிறகு, மீண்டும் தனது பயிற்சியை விரைவில் தொடங்குவார் என காசி விஸ்வநாதன் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், மும்பையில், ருதுராஜின் திருமணத்திற்குப் பிறகு நான், தோனியை மரியாதை நிமித்தமான சந்தித்தேன், அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். அவர் 3 வாரங்கள் ஓய்வெடுத்துவிட்டு, பயிற்சியில் ஈடுபடுவார் எனக் கூறியுள்ளார்.

அவர் கூறியது போல், அவர் ஜனவரி-பிப்ரவரி வரை விளையாடப் போவதில்லை. அதையெல்லாம் நாம் அவருக்கு நினைவூட்டத் தேவையில்லை என்று விஸ்வநாதன் கூறினார். தோனியின், எதிர்காலம் என்ன என்பது குறித்தும் பேசிய விஸ்வநாதன், என்ன செய்வது, எப்படிப் போவது என்பது அவருக்கு தெரியும், எனவே, நாங்கள் அவரிடம் என்ன செய்யப் போகிறீர்கள், எப்படி என்று கேட்கப் போவதில்லை. அவரே எங்களுக்குத் தெரிவிப்பார். அவர் என்ன செய்தாலும், முதலில் சீனிவாசனிடம் தான் கூறுவார். வேறு யாருக்கும் தெரிவிக்கமாட்டார். அவரிடமிருந்து தான் தோனி இதைத்தான் செய்கிறார் என்ற தகவலைப் பெறுவோம். கடந்த 2008ல் இருந்து இப்படித்தான், இப்படித்தான் தொடரும் என்று விஸ்வநாதன் குறிப்பிட்டார்.

Kokila

Next Post

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 காலியிடங்களின் எண்ணிக்கை 20,000 ஆக உயர்த்த வேண்டும்‌...! அன்புமணி கோரிக்கை...!

Thu Jun 22 , 2023
டி.என்.பி.எஸ்.சி தொகுதி 4 காலியிடங்களின் எண்ணிக்கை 10,748 ஆக உயர்த்தப்படுவது போதுமானதல்ல. இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில்; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த ஆண்டு ஜுலை மாதம் 24-ஆம் நாள் நடத்தப்பட்ட தொகுதி 4 தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10,117 என்பதிலிருந்து 10,748 ஆக உயர்த்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் […]

You May Like