சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், தனியார் நிறுவனம் நடத்திய பட்டமளிப்பு விழாவுக்காக அண்ணா பல்கலைகத்தின் அரங்கத்தை பயன்படுத்தியதாகக் கூறினார். நிகழ்ச்சி நடத்திய தனியார் நிறுவனத்திற்கும், பல்கலைக்கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த நிகழ்ச்சிக்கு கடந்த நவம்பர் மாதமே அனுமதி கோரியதாகவும், முதலில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் கடிதம் தந்ததாக கூறி பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி கோரப்பட்டதாக கூறினார்.
ஆனால், முன்னாள் நீதிபதி வள்ளிநாயகத்தை அவர்கள் ஏமாற்றியிருப்பதாகவும் துணைவேந்தர் வேல்ராஜ் குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக, ஆளுநரின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் துணைவேந்தர் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, அரசு முத்திரையுடன் நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.