விஜய், நடிகைகளின் இடுப்பை கிள்ளி நடனம் ஆடுவதாக அண்ணாமலை சொல்வது, அவரின் தனிப்பட்ட கருத்து. இதையெல்லாம் பார்த்து சிரித்துக் கொண்டு கடந்துவிட வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு விவகாரத்தில் நாடகமாடுவதை விடுத்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதுகுறித்து பேசியிருந்த அண்ணாமலை, ”தமிழக வெற்றி கழகம் பள்ளி மாணவர்களை போல அரசியல் செய்து வருகின்றனர். நடிகைகளின் இடுப்பை கிள்ளி விஜய் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். நான் விஜய் போன்று நடிகைகளின் இடுப்பை கிள்ளி, நடனம் ஆடிக்கொண்டு அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறேனா?
நான் களத்தில் போராடிக் கொண்டிருக்கிறேன். விஜய் வொர்க் பிரம் ஹோம் பாலிடிக்ஸ் செய்கிறாரா? அவருக்கு 50 வயதில்தான், அரசியலுக்கு வர தோன்றியதா? திமுகவின் B டீம் தான் விஜய். ஆணித்தரமாக உறுதியாக சொல்கிறேன். தவெகவின் நடவடிக்கையை பார்த்த பிறகு சொல்கிறேன். திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட சீக்ரெட் ப்ராஜெக்ட் தான் தவெக” என்று அண்ணாமலை விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், ”அது விஜய்யின் தொழில். அவர் சினிமாத்துறையில் இருப்பதால் படப்பிடிப்புக்கு செல்கிறார். எங்களை போல், தினமும் களத்திற்கு வராமல் இருக்க அவருக்கு நேரம் கிடைக்காமல் இருக்கலாம். ஒரு நாள் அவரும் வருவார். அதை நாம் குறையாக சொல்லக் கூடாது. விஜய், நடிகைகளின் இடுப்பை கிள்ளி, நடனம் ஆடுவதாக அண்ணாமலை சொல்வது, அவரின் தனிப்பட்ட கருத்து. இதையெல்லாம் பார்த்து சிரித்துக் கொண்டு கடந்துவிட வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”படிக்கும் பிள்ளைகள் பற்றி கவலைப்படவில்லை. குடிக்கிற வருமானம் குறைந்தால் உடனே ஆய்வு நடத்துகிறார்கள். குடிக்க வருவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய திட்டம் எல்லாம் போடுகிறீர்கள். டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் முதலில் ஒரு லட்சம் கோடி ஊழல் என்றார்கள். ஒரு வாரத்திற்குள் 1,000 கோடி தான் ஊழல் என்றார்கள். கடைசியாக முடிக்கும் போது 100 கோடியாக என்பார்கள். அப்படியும் இல்லையென்றால், இதுபோன்ற ஊழல் நடக்கவே இல்லை என்று கூட சொல்வார்கள்” என்று விமர்சித்தார்.