தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்த இளைஞர் மீது ஆசிட் வீசிய இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள பஹதுர்கர் பகுதியில் வசிப்பவர் ஷியாம் சிங் (25). பெற்றோரை இழந்த இவர் சோனிபட் மயூர் விஹாரில் உள்ள தனது அத்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு, கோஹானா கிராமத்தை சேர்ந்த அஞ்சலி (23) என்ற பெண்ணுடன் சில நாட்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அஞ்சலி, ஷியாமை தினமும் போனில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். ஒரு நாள் அந்த பெண் திடீரென தனது தாயுடன் ஷியாமின் அத்தை வீட்டிற்கு வந்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஷ்யாம் சிறிது அவகாசம் கேட்டுள்ளார்.
இதற்கிடையே, அஞ்சலிக்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பதும், அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரியவே ஷியாமும் அவரது அத்தையும் திருமணத்திற்கு மறுத்து விட்டனர். இதனால் கோபத்துடன் சென்ற அஞ்சலி, தொலைபேசியில் ஷியாமை தொடர்பு கொண்டு, “நீ எனக்கு கிடைக்கவில்லை என்றால் யாருக்கும் கிடைக்க விடமாட்டேன்” என்று கூறி மிரட்டியுள்ளார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 26ஆம் தேதி மாலை வீட்டை வீட்டு ஷியாம் வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த அஞ்சலி, தான் கையில் கொண்டு வந்த ஆசிட்டை ஷியாம் மீது வீசினார். இதில் ஷியாமின் கை, கால், வாய், கழுத்து, இடுப்பு ஆகிய பகுதிகள் பலத்த காயமடைந்ததால் வலியில் அலறியபடி ஷியாம் ஓடினார்.
இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் ஷியாமை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஐசியூவில் சிகிச்சை பெற்றுவரும் ஷியாமின் உடல்நிலை மிக கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டிஎஸ்பி சிட்டி வீரேந்திர ராவ் கூறுகையில், “எங்களுக்கு ஆசிட் வீசியதாக புகார் வந்துள்ளது. இளைஞரின் வாக்குமூலத்தை பதிவு செய்ய முடியவில்லை. அவருடைய அத்தையின் வாக்குமூலத்தின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஷியாம் மீது ஆசிட் வீசிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பெண் அஞ்சலியை போலீசார் கைது செய்துள்ளனர்” என்றார்.