தூத்துக்குடி மாவட்டம் கீழநம்பியார்புரத்தில் செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அதே பள்ளியில் 2ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரகதீஸ்வரனை பள்ளி தலைமை ஆசிரியர் தாக்கியதாக மாணவனின் தந்தை சிவலிங்கம், தாய் செல்வி மற்றும் தாத்தா முனியசாமி ஆகியோர் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வாக்குவாதம் முற்றியதை அடுத்து ஆசிரியர் ஒருவரை விரட்டி விரட்டி தாக்கியுள்ளனர்.
பள்ளியில் இருந்த மேசை, நாற்காலி ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், இதுசம்பந்தமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடக்கப் பள்ளியில் ஆசிரியரை ஓட ஓட விரட்டி தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.