கன்னியாக்குமாரியை சேர்ந்தவர் 22 வயதான துர்கா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் புதுவை திப்புராயப்பேட்டையில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், துர்காவிர்க்கும் அவரது அக்காவிற்கும் கடந்த 2 நாட்களுக்கு முன் சண்டை வந்துள்ளது. இதனால் தனது அக்காவிடம் கோபித்துக்கொண்ட துர்கா, வீட்டை விட்டு சென்றுள்ளார். எங்கு போவது என்று யோசித்த துர்கா, தனது தாய் வீட்டிற்கு செல்ல முடிவு செய்துள்ளார். அதன் படி, அவர் ஆட்டோவில் ஏறி புதிய பேருந்து நிலையம் சென்றுள்ளார்.
ஆனால் ஊருக்கு செல்ல அவரிடம் கையில் பணம் இல்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல், துர்கா திகைத்து நின்றுள்ளார். அவர் குழம்பி நிற்பதை அறிந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், துர்காவிடம் சென்று தான் உதவி செய்வதாக கூறியுள்ளார். அதன் படி, அவர் துர்காவை தனது ஆட்டோவில் ஏற்றி, முதலியார்பேட்டை அனிதாநகர் பெட்ரோல் நிலையம் அருகே அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயந்து போன துர்கா, சத்தம் போட்டுள்ளார்.
இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணை அங்கேயே இறக்கி விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார். இதனை, அங்கிருந்த 3 பேர் கவனித்துள்ளனர். பின்னர் அவர்கள் துர்காவிடம் சென்று நைசாக பேச்சு கொடுத்துள்ளனர். மேலும், அவருக்கு தங்க இடம் கொடுப்பதாக கூறி, அனிதா நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை நம்பிய துர்கா அவர்களுடன் சென்றுள்ளார். பின்னர் அவர்கள் 3 பேரும் சேர்ந்து துர்காவிற்கு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளனர். 2 நாட்கள் அந்த பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், 3 பேரும் இல்லாத நேரத்தில் அங்குள்ள கடைக்கு வந்து, நடந்த சம்பவத்தை துர்கா கூறியுள்ளார். இதுகுறித்து முதலியார்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, காவல் துறையினர் விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டனர். மேலும், துர்காவை கடத்தி சென்ற சாதிக்பாட்ஷா, தினேஷ், அரவிந்தன் ஆகியோரை கைது செய்தனர்.