பாகிஸ்தான் நாட்டின் கோ ஹிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர், சில வாலிபர்களுடன் நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை பார்த்த இவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ஊர் பெரியவர்கள் நடத்திய பஞ்சாயத்தில் அந்த இளம்பெண்ணை கொலை செய்ய உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த இளம்பெண்ணின் பெற்றோரும் அவரை கவுரவ கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. அவர்கள் உடனடியாக அந்த கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, ஊர் பஞ்சாயத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்றொரு சிறுமியை போலீசார் மீட்டனர். இந்நிலையில், இளம்பெண்ணுடன் நடனமாடிய வாலிபரையும் போலீசார் கிராமத்தினரிடம் இருந்து மீட்டனர். பின்னர், அந்த இளம்பெண் கொலை தொடர்பாக அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், “இளம்பெண்ணை கொலை செய்தவர்கள் மற்றும் பஞ்சாயத்தில் ஆலோசனை செய்தவர்கள், பெண்ணுக்கு மரண தண்டனை விதித்தவர்கள் யார் என்பதை கண்டறிய விசாரணை தொடங்கியுள்ளோம்” என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.