வாட்ஸ்அப் வீடியோ காலில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை திருவொற்றியூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனியார் மகளிர் கலை கல்லூரியில் வரலாறு 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர், தினசரி மாநகர பேருந்தில் கல்லூரிக்கு செல்லும்போது, அதே பேருந்தில் பயணிக்கும் ஆர்.கே.நகர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ படித்து வரும் திருவொற்றியூர் எஸ்.பி கோயில் 1வது தெருவை சேர்ந்த பரத் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நண்பர்களாக பழகி உள்ளனர். இருவரும், ஒரே ஊர் என்பதால் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு, அடிக்கடி வாட்ஸ்அப் சாட்டிங் மற்றும் வீடியோ காலில் பேசி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி இரவு கல்லூரி மாணவன் பரத், மாணவிக்கு வீடியோ கால் செய்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, மாணவியிடம் ஆபாசமாக பேசியதோடு, அவரது உடையை கழட்டுமாறு கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி, அவரது போன் இணைப்பை துண்டித்துள்ளார். ஆனாலும், தொடர்ந்து அந்த மாணவிக்கு பரத் போன் செய்து, தொல்லை கொடுத்துள்ளார். இதனால், பயந்து போன மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர், இதுதொடர்பாக திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், பரத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.