திருமண மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் சிக்கி தவிக்காமல் இருப்பது எப்படி? என காவல்துறையினர் அறிவுரைகள் வழங்கியுள்ளனர்.
உலகம் டிஜிட்டல் மயமாக மாறி வரும் நிலையில், மோசடிகளும் புதுவிதங்களில் மாறி கொண்டு தான் இருக்கின்றன. மேட்ரிமோனியல் வெப்சைட் மூலம் திருமண மோசடிகளை அரங்கேற்றி வரும் கும்பலை காவல்துறையினர் கைது செய்து வந்தாலும், வரன் பார்த்தும் நடக்கும் திருமணங்களிலும் மோசடி கும்பல் தங்கள் கைவரிசையை காட்டி வருகிறது. திருமண மோசடிகள் அரங்கேறுவது எப்படி? என்பதனை காவல்துறையினர் விவரிக்கின்றனர்.

மேட்ரிமோனியல் வெப்சைட் மூலம் தான் திருமண மோசடிகள் அதிகம் நடக்கிறது. திருமண தகவல் இணையதளத்தில் பொய்யான தகவல்களை பதிவு செய்து மோசடி கும்பல் தங்கள் சித்து வேலைகளை அரங்கேற்றி வருகிறது. திருமண தகவல் இணையதளம் மூலம் வரன் தேடும் போது மோசடி நபர்களிடம் ஏமாறாமல் இருக்க பல்வேறு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். மேட்ரிமோனியல் வெப்சைட் குறித்து முழுமையாக அதனை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், போலி இணையதளமாக கூட இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக, போலி வெப்சைட்களிலும், போலி அடையாளங்களை இணைய தளத்தில் பதிவு செய்து வைத்திருப்பதால் ஏமாறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றன.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் பிற மொபைல் அப்ளிகேஷன்கள் போலவே இந்த மேட்ரிமோனி வெப்சைட்களிலும் கவனமாக இருக்கவில்லை என்றால் ஆபத்து தான். மாறிவிட்ட சூழலில் திருமண வரன் பார்ப்பது மேட்ரிமோனி தளங்களை நம்பித்தான் இருக்கிறது என ஒரு புறம் இருந்தாலும், மோசடி நபர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். திருமண மோசடிகளால் பாதிக்கப்படுவர்கள் சிலரே புகார் கொடுக்கின்றனர். ஏமாந்து விட்டதால் அவமானமாக நினைத்து காவல்துறை பக்கமே வராத பலர் இருப்பதாக சைபர் கிரைம் காவல்துறையினர் கூறுகின்றனர். திருமண தகவல் மையங்களின் இணையதளத்தில் பொய்யான விவரங்களை கொடுத்து, விதவைப் பெண்கள், விவகாரத்துப் பெற்று 2ஆம் திருமணத்திற்கு பதிவு செய்துள்ள பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலிடம் கவனமாக இருக்க வேண்டும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.