ஜம்மு காஷ்மீரில் பனிக்கட்டிகளின் மீது வெறும் காலில் நின்றபடி இளம் பெண்கள் தற்காப்பு கலை பயிற்சிகள் செய்து அசத்தும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குளிர்காலம் தொடங்கி விட்டாலே குளிர்ச்சியான சூழ்நிலையை சமாளிப்பதற்கு பலரும் பல்வேறு வழிமுறைகளை கையாள்வார்கள். நம் நாட்டில் காஷ்மீர் போன்ற பகுதிகளில் நிலவும் பனிப்பொழிவே உடலை நடுங்க வைத்துவிடும். மேலும் காஷ்மீரின் சில இடங்களில் பனி போர்த்தப்பட்டு ரம்மியமாக காட்சி அளிக்கும். குளிர்ச்சி குடிகொண்டிருக்கும் ஜம்மு காஷ்மீரில் புல்வெளிகள் மட்டுமின்றி சாலைகள், மரங்கள், வீட்டு கூரைகள் என சுற்றுப்புற பகுதிகளில் பனிப்பிரதேசம் போல் பளிச் வெண்மை நிறத்தில் பனித்துளிகள் படர்ந்திருக்கும். தினமும் அதிகாலை உடற்பயிற்சி செய்பவர்கள் கூட குளிர் காலங்களில் குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுந்து பயிற்சிகளை மேற்கொள்வதற்கு தடுமாறுவதுண்டு.
இந்தவகையில் காஷ்மீர் அடுத்த பீர்வா நகரத்தில் பனிக்கட்டிகளின் மீது வெறும் காலில் நின்றபடி இளம் பெண்கள் தற்காப்பு கலை பயிற்சிகள் செய்து அசத்தும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது. நாங்கள் பயிற்சி பெறுவதற்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றும் திறந்தவெளியில்தான் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அங்கு பயிற்சி பெற்றுவரும் சிறுமி முஸ்கான் கூறியுள்ளார்.
பனிக்காலத்திலும் இதேநிலை தான் தொடர்வதாகவும் அதற்காக நாங்கள் சோர்ந்து போவதில்லை. பனியிலும் கூட பயிற்சி செய்வதற்கு ஆர்வமாக இருக்கிறோம். உடல் அளவிலும், மனதளவிலும் எங்களை நாங்களே வலுப்படுத்திக் கொள்கிறோம். போட்டியில் பங்கேற்று இந்தியா, காஷ்மீருக்கு பெருமை சேர்க்க விரும்புகிறோம்” என்று கூறுகிறார். மேலும், ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதை இலக்காக கொண்டிருப்பதால் பனியைக் காரணம் காட்டி ஒதுங்கி இருக்க விரும்பவில்லை என்பது பயிற்சி பெறும் பெண்களின் கருத்தாக இருக்கிறது.