பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். நேற்று அதிகாலை அவரது பங்களாவுக்குள் இரண்டு இளைஞர்கள் சுவர் ஏறி குதித்தனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர்கள் அந்த இரு இளைஞர்களையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து பாந்த்ரா மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘ஷாருக்கானின் பங்களாவுக்குள் (மன்னத்) அத்துமீறி சுவர் ஏறி குதித்து உள்ளே 2 இளைஞர்களை பாதுகாப்பு ஊழியர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் குஜராத்தில் இருந்து வந்ததாகவும், ஷாருக்கானை சந்திக்க விரும்பியதாகவும் தெரிவித்தனர். இருந்தும் முன் அனுமதியின்றி பங்களாவுக்குள் நுழைந்ததால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.