தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் வரலாறு காணாத மழையால், கடுமையான பாதிப்புகளை சந்தித்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். அரசு சார்பில், தன்னார்வலர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், முன்னதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு வங்கிக் கணக்கு மூலம் ரூ.6,000 பணம் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ரொக்கப்பணம் வழங்கும் பணி முடிவடைந்த நிலையில், தென்மாவட்டங்களில் தற்போது அந்தப் பணி ஆரம்பமாகியுள்ளது. இப்பணி முடிந்த பின், அனைத்து மாவட்டங்களிலும் குடும்ப அட்டை இல்லாதவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு பணம் செலுத்தப்பட இருக்கிறது.