தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்த கையோடு, தேர்தல் நடத்தை விதிகளும் அமலில் உள்ளது. இந்நிலையில், தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்கும். ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை இல்லை என தெரிந்தால், அதற்கு முந்தைய நாளான 18ஆம் தேதியே புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். விடுமுறை அளிக்காத நிறுவனங்களின் ஊழியர்கள் 1950 என்ற தேர்தல் ஆணையத்தின் எண்ணுக்கு புகார் அளிக்கலாம்.
தேர்தல் பரப்புரையானது வரும் 17ஆம் தேதி மாலையுடன் நிறைவடையும். பூத் சிலிப் வழங்கும் பணி 92.80% நிறைவடைந்துள்ளது. பூத் சிலிப் கிடைக்காதவர்கள் ஆன்லைனிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூத் ஸ்லிப் இல்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம். தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, தபால் வாக்குக்களை தபால் மூலமாக அனுப்ப முடியாது. இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பரப்புரை மேற்கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Read More : அடிக்கிற வெயிலுக்கு ஐஸ் வாட்டர் குடிக்க தோணுதா..? இதில் எவ்வளவு ஆபத்து இருக்குன்னு தெரியுமா..?