சிவகாசியில் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர், அவரது கணவரை தனியாக வரவழைத்து வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சிவகாமிபுரம் காலனியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கு கற்பகம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 4 மற்றும் 2 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கற்பகத்திற்கும், மாரிமுத்து என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. அடிக்கடி தனிமையில் இருவரும் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்த நிலையில், இருவரையும் கண்டித்துள்ளார். இந்நிலையில் தான், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கருப்பசாமியும், மாரிமுத்தும் செல்போனில் பேசியுள்ளனர்.
அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், சமரசம் பேசுவதற்காக கடந்த 9ஆம் தேதி கருப்பசாமியை மாரிமுத்து நேரில் அழைத்துள்ளார். இதனை நம்பி அங்கு சென்ற கருப்பசாமி, தனியார் பட்டாசு ஆலைக்கு அருகே வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில், பாறைப்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த மாரிமுத்து, அவரது சகோதரர் குமார், பட்டாசு ஆலை ஒப்பந்ததாரர் கணேசன், ஜோசப் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாரிமுத்து பட்டாசு ஆலையில் பணிபுரியும் சக பெண் தொழிலாளர்களை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்திருப்பது தெரியவந்தது. இதில், கணேசன் மீது ஏற்கனவே 5 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. போனில் பேசியபோது கருப்பசாமி மாரிமுத்துவை ஆபாசமாக பேசியுள்ளார். இதனால், அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி, அப்போது ஏற்பட்ட கோபத்தில் அவரை தனியாக வரவழைத்து 4 பேரும் திட்டமிட்டு கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, அவர்களை காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.