கடலில் குதித்து வானிலை நிலவரத்தை வழங்கிய செய்தியாளர் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அதிதீவிர சூறாவளி புயலாக உருமாறிய, ‘பிபர்ஜோய்’ குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இருப்பினும், கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்ததால் குஜராத் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசியதால் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு முறிந்து விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 940 கிராமங்கள், கடலோர பகுதிகளில் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
இதற்கிடையே, பாகிஸ்தானை சேர்ந்த செய்தியாளரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், பாகிஸ்தானை சேர்ந்த செய்தியாளர் ஒருவர், புயல் குறித்த நிலவரத்தை கூறிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென கடலில் குதித்த அவர், தொடர்ந்து வானிலை நிலவரத்தை கூறிக்கொண்டே இருந்தார். இதுகுறித்த வீடியோ வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது.