மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் திருவேள்விக்குடி பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சி (73). இவர் 2012 பிப்ரவரி 16ஆம் தேதி குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், தனது மகன் அதிமுகவில் சேர இருந்ததாகவும், அப்படி சேர்ந்தால் மகனை கொலை செய்து விடுவதாகவும் திமுகவினர் மிரட்டினர். குத்தாலம் திமுக முன்னாள் எம்எல்ஏ கல்யாணத்தின் சகோதரர் சந்திரசேகர் எனது வீட்டுக்கு வந்து என்னை தாக்கினார். இதற்கு, முன்னாள் எம்எல்ஏ கல்யாணம், அவரது சகோதரர் கோவிந்தராசு, மகன்கள் முன்னாள் எம்எல்ஏ கே.அன்பழகன், அறிவழகன் மற்றும் ரவி, மனோகர் உள்ளிட்டோர் தூண்டுதலாக இருந்தனர்” என்று அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், விசாரணையின்போது மனோகர் என்பவர் இறந்துவிட்டார். இது தொடர்பான வழக்கு மயிலாடுதுறை குற்றவியல் நடுவர் மன்றம் எண்.1-ல் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி கலைவாணி, குற்றம்சாட்டப்பட்ட சந்திரசேகர், முன்னாள் எம்எல்ஏக்கள் கல்யாணம், அவரது மகன் கே.அன்பழகன் மற்றும் மற்றொரு மகன் கே.அறிவழகன் உள்ளிட்ட 6 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ஒரு மாத காலஅவகாசம் வழங்கியுள்ளார்.