பழம்பெரும் நடிகர் ரவிக்குமார் தன்னுடைய 71 வயதில் இன்று காலமானார்.
தமிழ், மலையாளத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் ரவிக்குமார். கே.பாலசந்தரின் “அவர்கள்” என்ற படத்தில் கமல்ஹாசன், ரஜினி ஆகியோர் கதாநாயகனாக நடித்திருப்பார்கள். இந்த படத்தில் 3-வது கதாநாயகனாக நடிகர் ரவிக்குமார் நடித்திருப்பார்.
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் தான் இவர் பிறந்தார். உல்லாச யாத்ரா என்ற மலையாள திரைப்படம் மூலம் தான் சினிமாவுக்குள் முதன்முதலாக அறிமுகமானார். பிறகு தமிழ் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த இவர், மலபார் போலீஸ், ரமணா, மாறன், விசில், சிவாஜி, வியாபாரி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரவிக்குமார், இன்று சிகிச்சை பலனின்றி சென்னையில் காலமானார். வேளச்சேரியில் உள்ள பிரசாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், காலமானதாக அவரது மகன் தெரிவித்துள்ளார். நடிகர் ரவிக்குமார், நடிகை சுமித்ராவின் முன்னாள் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.