கடலூரில் அடுத்தடுத்து காணாமல் போன இளைஞர்கள், கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் எம்.புதூர் எம்.புதூர் பகுதியில் வசித்து வந்தவர் சரண்ராஜ். டி.புதூர் பகுதியில் வசித்து வந்தவர் அற்புதராஜ். இந்நிலையில், இருவரையும் காணவில்லை என பிப்ரவரி 1ஆம் தேதி அவர்களது பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இருவரையும் தேடி வந்தனர். விசாரணையில், எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், அவர்கள் காணாமல்போன விவகாரத்தில் அவர்களது நண்பர்களுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, காணாமல்போன சரண்ராஜ், அற்புதராஜ் ஆகிய இருவரின் நண்பர்கள் 5 பேரை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இருவரையும் கொலை செய்து புதைத்ததாக தெரிவித்தனர். இதைக்கேட்டு போலீசார் மற்றும் குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், நெய்வேலி அருகே உள்ள என்.எல்.சி சுரங்கம் உமங்கலம் என்ற பகுதியில் இருவரையும் புதைத்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த ஜெயக்குமார் தலைமையிலான போலீசார், இருவரது உடல்களையும் தோண்டி எடுத்தனர். பின்னர், 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நண்பர்கள் 5 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்குப் பின்னரே, கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும்.