ஆட் ப்ளாக்கர்களைப் பயன்படுத்துவதன் மூலம் விளம்பரங்களை தவிர்த்து விட்டு காணொளியை மட்டும் பயனர்கள் பார்க்க முடியும். இது விளம்பரங்கள் மூலமாக கிடைக்கும் வருவாய் மட்டுமின்றி யூடியூபின் சந்தாதாரர் முறையில் கிடைக்கும் வருவாயையும் சேர்த்து பாதிக்கும். ஆகவே, இந்த ஆட் ப்ளாக்கர்களை யூடியூப் (Youtube) தளத்தில் தடை செய்யும் வசதியை இப்போது சோதனை செய்து வருகிறது அந்நிறுவனம். விளம்பரங்கள் இன்றி காணொளிகளை பார்க்க ப்ரீமியம் வசதியை அந்நிறுவனமே வழங்கி வருகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டில் 80 மில்லியன் ப்ரீமியம் சந்தாதாரர்கள் அளவை எட்டி இருக்கிறது யூடியூப். இந்த ப்ரீமியம் வசதியை இன்னும் பல மில்லியன் பயனாளர்களை பயன்படுத்த வைக்க பல்வேறு புது திட்டங்களை யூடியூப் நிறுவனம் தீட்டியிருக்கிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த ஆட் ப்ளாக்கர்களை யூடியூப் தளத்தில் தடை செய்யும் திட்டத்தையும் செயல்படுத்தவுள்ளது.
ஆட் ப்ளாக்கர்களைப் பயன்படுத்தும் பயாளர்களுக்கு இப்போது பாப்-அப் ஒன்று தோன்றுகிறதாம். அவற்றில் யூடியூபில் விளம்பரங்களை அனுமதிக்க வேண்டும் (அ) யூடியூப் ப்ரீமியம் வசதிக்கு சந்தா செய்ய வேண்டும் என 2 ஆப்ஷன்கள் காட்டப்படுவதாக இணையத்தில் ஒரு ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டு உள்ளது. இப்போது இத்திட்டம் சோதனை முறையில் உள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.