ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ருத்ரராஜு கிடுகு பதவியில் இருந்து திடீரென விலகியுள்ளார். இதனால் ஆந்திரா காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டி (ஏபிசிசி) தலைவர் ருத்ரராஜு கிடுகு நேற்று பதவியில் இருந்து விலகினார். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும், முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் மகளுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, தனது ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியை காங்கிரசுடன் கடந்த 4ஆம் தேதி இணைத்துக் கொண்டார்.
அவரை ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கவே, ருத்ரராஜு கிடுகு ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஷர்மிளாவுக்கு பதவி வழங்கி அதன் மூலம், அவரது அண்ணன் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு சவால் அளிக்கவே, அக்கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது. ஆந்திரா காங்கிரஸ் தலைவர் மாற்றம் மூலம், அம்மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் பணிகளை காங்கிரஸ் துவக்கிவிட்டதாகவே அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்தபோது ஷர்மிளா பேசுகையில், ”மணிப்பூரில் நடந்த சம்பவத்தால் தான் மிகவும் வேதனை அடைந்ததாகவும், காங்கிரஸ் போன்ற ஒரு கட்சி ஆட்சியில் இல்லாவிட்டால் இதுபோன்ற சம்பவங்கள் எப்போதும் நடக்கலாம் என்றும் கூறியிருந்தார். மேலும், ராகுலை இந்தியாவின் பிரதமராகப் பார்ப்பது தனது தந்தையின் கனவு என்றும், அதைச் செய்வதில் தான் ஒரு பகுதியாக இருக்கப் போவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சி தனக்கு எந்தப் பொறுப்பை வழங்கினாலும், அதை விசுவாசத்துடன் செய்வேன்” எனவும் ஒய். எஸ்.ஷர்மிளா தெரிவித்திருந்தார்.