பெங்களூருவில் சிக்னலில் காத்திருக்கும் போது, ஒரு பெண் ஸ்கூட்டரில் மொபைல் போனை பொருத்தி, ஜூம் மீட்டிங்கில் இணைந்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும்போது, வாகன ஓட்டிகள் செல்போனில் போசுவது, பாட்டுக் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதையும் சர்வ சாதாரணமாக காண முடியும். தற்போது இதில் உச்சகட்டமாக ஒரு பெண், பரபரப்பான பெங்களூரு சிக்னலில் காத்திருக்கும்போது, ஜூம் மீட்டிங்கில் இணைந்திருந்த வீடியோ எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், சிக்னலில் ஸ்கூட்டரில் காத்திருக்கும் ஒரு பெண், வண்டியில் பொருத்தியுள்ள தனது ஸ்மார்ட்போனில் ஜூம் அழைப்பில் இணைந்துள்ளதை காண முடிகிறது. மேலும், வீடியோவில், ‘வொர்க் ஃப்ரம் டிராஃபிக். பெங்களூருவில் ஒரு சாதாரண நாள்.’ என்ற வாசகம் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலரும் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். எனினும், வாகனம் ஓட்டும்போது சாலை விதிகளை 100 சதவீதம் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதை போக்குவரத்து போலீஸார் மற்றும் சமூக ஆர்வலர்களின் வலியுறுத்துகின்றனர்.