தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் ஒப்பந்த செவிலியர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மற்றும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். குறிப்பாக, திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி தங்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு, அடிப்படைப் பணியாளர் உரிமைகளுக்காகவும் அவர்கள் குரல் கொடுத்து வந்தனர். இத்தகைய போராட்டங்களின் விளைவாக, தற்போது ஒப்பந்த செவிலியர்களுக்கு ஒரு மிகப்பெரிய நிம்மதி தரும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுவரை அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் நிரந்தரப் பணியாளர்களுக்கு மட்டுமே ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அதே கடினமான பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த செவிலியர்களுக்கு இந்தச் சலுகை மறுக்கப்பட்டு வந்தது. இது செவிலியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது நிரந்தரப் பணியாளர்களைப் போலவே ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களுக்கும் ‘ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு’ வழங்கத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த அறிவிப்பு, பல ஆண்டுகளாகப் போராடி வரும் ஒப்பந்த செவிலியர்களுக்குச் சற்று ஆறுதலையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண் பணியாளருக்கு மிக அவசியமான மகப்பேறு கால உதவியை அரசு அங்கீகரித்துள்ளது, சுகாதாரத் துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இந்த முடிவை வரவேற்றுள்ள செவிலியர் சங்கங்கள், தங்களது பிரதான கோரிக்கையான பணி நிரந்தரம் குறித்த அறிவிப்பையும் அரசு விரைவில் வெளியிடும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
Read More : “12 தொகுதிகள்.. உதயசூரியன் வேண்டாம்.. தனிச் சின்னம் தான்”..!! திமுகவுக்கு பேரதிர்ச்சி கொடுத்த வைகோ..!!



