தமிழ்நாட்டில் அடித்தட்டு மக்களுக்கான சேவைகளை முன்னின்று நடத்தும் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களின் நீண்டகாலக் கனவு தற்போது நனவாகியுள்ளது. அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், அவர்களுக்கான ஓய்வூதியச் சலுகைகளை உயர்த்தி முதலமைச்சர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சரின் இந்த புதிய உத்தரவின்படி, இதுவரை மாதம் 2,000 ரூபாயாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு ஓய்வூதியம் (Special Pension), இனி 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். விலைவாசி உயர்வு மற்றும் முதுமைக்கால மருத்துவச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, இந்த 50 சதவீத உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய உயர்வு மட்டுமல்லாமல், ஊழியர்கள் தங்களது பணிக்காலம் முடிந்து விடைபெறும்போது வழங்கப்படும் பணிநிறைவு பணிக்கொடை (Ex-gratia payment) தொகையிலும் மிகப்பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது தமிழக அரசு. இதுவரை வழங்கப்பட்டு வந்த 50,000 ரூபாய் என்ற தொகையை, அப்படியே இருமடங்காக உயர்த்தி 1 லட்சம் ரூபாயாக வழங்க சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.



