கரூர் துயர சம்பவத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் உள்ளரங்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்ட சுமார் 2,000 பேர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய விஜய், தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் ஆளும் கட்சி மீதான விமர்சனங்களை முன்வைத்தார்.
விஜய் அளித்த முக்கிய வாக்குறுதிகள் :
விஜய் தனது பேச்சின்போது, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்த உள்ள சில முக்கியமான செயல்திட்டங்களை கோடிட்டு காட்டினார்.
* ஒவ்வொரு வீட்டிலும், குடும்ப உறுப்பினர்களின் வசதிக்காகக் குறைந்தபட்சம் ஒரு மோட்டார் சைக்கிள் இருக்கும்படி மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவோம்.
* அனைவருக்கும் நிரந்தர வீடுகள் கிடைப்பதை உறுதி செய்வோம்.
* ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது கட்டாயமாகப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்ற இலக்குடன் பல புதிய திட்டங்களை செயல்படுத்துவோம்.
இந்த வாக்குறுதிகள் குறித்த முழுமையான விளக்கங்கள் அனைத்தும் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெளிவாக அளிக்கப்படும் என்றும், மக்களுக்கு நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் நான் அரசியலுக்கு வந்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக மீது கடுமை விமர்சனம் :
பாலாற்றில் நடைபெறும் மணல் கடத்தல் மூலம் சுமார் ரூ.4,730 கோடி அளவுக்கு மிகப் பெரிய கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. “காவிரி டெல்டா விவசாயிகளைப் போலவே, தமிழகத்தில் உள்ள நெசவாளர்களையும் திமுக அரசு கைவிட்டுவிட்டது. அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.500 மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. அவர்களுக்கு உரிய ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை. 60 வருடம் பழமையான ஒரு பேருந்து நிலையத்தைக் கூட இந்த ஆளும் திமுக அரசால் புதுப்பித்துக் கட்ட முடியவில்லை” என்று தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டினார்.
Read More : “திமுகவின் கொள்கையே கொள்ளை அடிப்பது தான்”..!! ஆளுங்கட்சியை அலறவிட்ட TVK தலைவர் விஜய்..!!



