புத்தாண்டு தினமான இன்று, இல்லத்தரசிகளுக்கு நிம்மதி தரும் செய்தியும், வணிகர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியும் ஒருசேர வெளியாகியுள்ளன. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் ஆகியவை ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், 2026-ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று புதிய விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து சரிந்து வந்த வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை, இந்த மாதம் மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை கடந்த மாதத்தை விட ரூ.110 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் ஒரு வணிக சிலிண்டரின் விலை ரூ.1,849.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் விலை உயர்வு, ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
அதேசமயம், பொதுமக்களுக்குப் பெரிய ஆறுதலாக 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் பழைய விலையான ரூ.868.50-க்கே தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டின் தொடக்கத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்படாதது நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.



